×

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த பிரதான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகளை, 50 நாட்களில் பெற வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும். மேற்கண்ட திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துக்களை விரைவில் தமிழ்நாடு அரசு தரப்பில் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க உள்ளது.

மேலும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கண்ட விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘நீட் தேர்வு தொடர்பாக ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது. மேலும் கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது.
குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதனை எப்படி தடுக்க முடியும். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் முன்னதாக கையெழுத்து இயக்கத்திற்கு உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

The post நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...